கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்: எவரொருவர் ஆறுதலையும் ஆனந்தக் கண்ணீரையும் ஒரே வேளையில் தருபவரோ, எவரொருவர் தாலாட்டில் துயரத்தின் சுவையையும் ஒப்பாரியில் ஆழ்ந்த அமைதியையும் வைப்பவரோ, எவரொருவரால் அரசனாகவும் ஆண்டியாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியுமோ, எவரொருவருக்கு மயக்கமே தெளிவாகவும் தெளிவும் ஒரு மாயையாகவும் தெரிகிறதோ அவரின் இயற்பெயர் முத்தையா. புனைபெயர் கண்ணதாசன். பகவான் ரமணரின் முகமும் கண்ணதாசனின் முகமும் எந்தப் புகைப்படத்தில் எந்த நிலையில் பார்த்தாலும் பேரமைதியை எனக்குள் பரப்பும். ரமணர் சும்மா இருக்கச் சொன்னவர். கண்ணதாசன் சும்மா இருக்கத் தெரியாதவர். ரமணர் தனிமையில் உலகைத் தழுவிக்கொண்டவர். கண்ணதாசன் கூட்ட இரைச்சலின் நடுவில் தனிமையை வளர்த்துக் கொண்டவர். பகவான் ரமணரோ சென்றடைய வேண்டிய உயரம். கண்ணதாசனோ அனுபவித்தே ஆகவேண்டிய துயரம். எனக்குத் துயரம் பதின் வயதுகளில் மிகவும் பிடித்தது. ஏன் பிடித்தது? கண்ணதாசனால் பிடித்தது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கொரு காதல். இப்போது அது காதல் இல்லை,வெறும் எதிர்பால்கவர்ச்சி. பெண் உடல் மீதான குருட்டுக்காமம் என்று புரிகிறது. அந்த வயதில் அந்தக் காதல் பெரு...