கவலை இல்லாத மனிதன்

கவலை இல்லாத மனிதன்:


எவரொருவர் ஆறுதலையும் ஆனந்தக் கண்ணீரையும்

ஒரே வேளையில் தருபவரோ,

எவரொருவர் தாலாட்டில் துயரத்தின் சுவையையும்

ஒப்பாரியில் ஆழ்ந்த அமைதியையும் வைப்பவரோ,

எவரொருவரால் அரசனாகவும் ஆண்டியாகவும்

ஒரே நேரத்தில் இருக்க முடியுமோ,

எவரொருவருக்கு மயக்கமே தெளிவாகவும்

தெளிவும் ஒரு மாயையாகவும் தெரிகிறதோ அவரின் இயற்பெயர் முத்தையா. புனைபெயர் கண்ணதாசன்.

பகவான் ரமணரின் முகமும் கண்ணதாசனின் முகமும் எந்தப் புகைப்படத்தில் எந்த நிலையில் பார்த்தாலும் பேரமைதியை எனக்குள் பரப்பும். ரமணர் சும்மா இருக்கச் சொன்னவர். கண்ணதாசன் சும்மா இருக்கத் தெரியாதவர். ரமணர் தனிமையில் உலகைத் தழுவிக்கொண்டவர். கண்ணதாசன் கூட்ட இரைச்சலின் நடுவில் தனிமையை வளர்த்துக் கொண்டவர். பகவான் ரமணரோ சென்றடைய வேண்டிய உயரம். கண்ணதாசனோ அனுபவித்தே ஆகவேண்டிய துயரம். எனக்குத் துயரம் பதின் வயதுகளில் மிகவும் பிடித்தது. ஏன் பிடித்தது? கண்ணதாசனால் பிடித்தது.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கொரு காதல். இப்போது அது காதல் இல்லை,வெறும் எதிர்பால்கவர்ச்சி. பெண் உடல் மீதான குருட்டுக்காமம் என்று புரிகிறது. அந்த வயதில் அந்தக் காதல் பெரும் புதையல் எனக்கு. அந்தப் புதையல் எனக்கானது இல்லை என்று தெரிந்தபோது அழுதேன். அரற்றினேன். கதறினேன். அப்பொழுதில்தான் எங்கிருந்தோ பாடலாக என்னிடம் வந்தார் கண்ணதாசன். “கண்ணே கலைமானே” என்ற பாடலைக் கேட்டு அழுகிறேன். கேட்கும்போதெல்லாம் அழுகிறேன். அந்த அழுகை பேர் அமைதியைத் தருகிறது. என்னவென்று புரியாத அந்த உணர்வைத் தக்கவைத்துக் கொள்ள மீண்டும் மீண்டும் “கண்ணே கலைமானே” பாடலுக்குள் மூழ்கிப் போகிறேன். அப்படி ஓர் ஆனந்தம். அப்படி ஓர் ஆறுதல்.

 தொண்ணூறுகளில் திரைப்பாடல்களை கேசட்டுகளில் பதிந்து கேட்கும் வழக்கம் இருந்தது. ஊரில் இருந்த தங்கராஜ் மாமா பாடல் பதிவுக்கூடம் சென்று கேசட் முழுக்க கண்ணே கலைமானே பாடலைப் பதிந்து வந்து கேட்கத் தொடங்கினேன். கேசட்டின் ஒரு பக்கம் ஒன்பது முறையும் மறுபக்கம் ஒன்பது முறையும் ஒலிக்கும். நான் ஓராயிரம் முறை கேட்டேன். சலிக்கவே இல்லை. அன்னை தந்தை அறிவுரை கூறியும் கேட்கவில்லை. ஏன் அப்படி ஒரு விடாய்? இதுநாள் வரை எனக்குத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.

பள்ளி நாட்களில் பாடல்களாய் அறிமுகம் ஆன கண்ணதாசன் இன்று வரை இந்த நொடி வரை என்னை விட்டு விலகாமல் இருக்கிறார். பாடலாக மட்டும் அவர் இப்போது இல்லை. பாதை தவறும் போதெல்லாம் பக்கத்தில் இருந்து வெறுமனே பார்ப்பவராய், போதையில் ஆடும்போது ஆடடா ஆடு என்று ஆடவைத்து ரசிப்பவராய், தனிமையில் இருக்கும்போது தாங்கொணா ஞானத்துயர் தந்து தெளிவிக்கும் ஆசிரியராய், அடிக்கத் தெரியாத அன்னையாய், அடக்கத் தெரியாத அப்பனாய், யாதுமாய் இருக்கிறார் கண்ணதாசன்.

எனது நாற்பது வயதுகளில் இருக்கும் எனக்குக் கண்ணதாசன் இன்னும் பெரும் வியப்பாகவே இருக்கிறார். ஆனால் இப்போது அவரது பாடல்களாலோ கவிதைகளாலோ குறுங்காவியங்களாலோ உரைநடையாலோ சொற்பொழிவுகளாலோ என்னை ஈர்க்கவில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையால், கடந்து வந்த வலிகளால், இழந்த நிம்மதியால், நிம்மதி இழந்தபோதும் வாழ்வையும் மனிதரையும் வெறுக்காத உயர்ந்த தன்மையால் என்னை வியப்பில் ஆழ்த்துகிறார் கண்ணதாசன்.

கண்ணதாசன் புதிதாக எந்தத் தத்துவத்தையும் கண்டடையவில்லை. ஆனால் பட்டறிவின் செழித்த பழமாகிப் படிப்போர் மனங்களில் பெரும் சுவையாகச் சுரக்கிறார். கண்ணதாசன் கவிதை ஏதும் செய்யவில்லை. செய்யுள் செய்தார். செய்யுளில் யாரும் செய்யாத மனித வாழ்வின் அன்றாட வலிகளைச் செய்தார்.  “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என்று சொன்ன கண்ணதாசன், எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து மனம் மாறிய என்னைப் போன்றோருக்கு ஆசிரியராய் இருப்பது என்ன வியப்பு?

கண்ணதாசன் என்றதும் முதலில் மனதில் முகிழ்ப்பது அவரின் கனிந்த முகம். வலி கனிந்த, அனுபவம் கனிந்த, துயர் கனிந்த அந்த முகத்தைப் பார்த்தவாறே இருக்கலாம். வாழ்வின் முன் நின்று வீறமைதியில் அழும் ஒருவருக்கே அப்படி ஒரு முகம் வாய்க்கும். அழுவது என்றால் தோற்று அழுவது அன்று. அச்சத்தில் அழுவது அன்று. ஆழமாக வாழ்க்கை புரிந்துவிடும்போது ஆர்ப்பாட்டம் இல்லாமல் அகத்தில் இருந்து அருள் நிறைந்து வரும் இரக்கத்தின் அழுகை அது. நிலையாமையை உணர்ந்து நெகிழ்ந்து அன்பு காட்டும் உள்ளத்தின் அழுகை அது.

பித்தின் பெருக்கு அகத்தை அரித்துக்கொண்டு ஓடுந்தோறும், அமைதியின் அரவமில்லாத இறகு எங்கிருந்தோ பிரக்ஞையில் வந்து விழுந்தோறும், எந்த முரண் எங்கிருந்து கனன்று எரியுந்தோறும் அகத்தில் நிறைவது, வலிக்க வலிக்க வாழ்ந்து, இனிக்க இனிக்க அதை அடுத்தவர்க்கு அறிவுரையாக எடுத்துக் கூறும் ஆன்றோரின் முகம் மட்டுமே. எனக்கு கண்ணதாசன் எப்போதும் ஆன்றோன். சான்றோன்.

கண்ணதாசன் என்னைப் பலமுறை காப்பாற்றி இருக்கிறார். போதைப் பழக்கம் உச்சத்தில் இருந்த ஒரு காலத்தில் மதுவின் வெறியில் கண் மண் தெரியாமல் கண்டபடி நடக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. எத்தனை தொலைவாக இருந்தாலும் கைகளை வீசிக்கொண்டு கத்தி கத்திச் சித்தர் பாடல்களைப் பாடிக்கொண்டு பெருநகரத் தெருக்களில் சாலைகளில் திரிந்தவன் நான். அப்படி ஓர் இரவில் மது வெறி ஏறிக் கோயம்பேடு சாலையில் கத்திக்கொண்டு சென்ற என்னைக் காவலர் பிடித்துக்கொண்டு போய் காவல் நிலையத்தில் அமர வைத்தார். மது மயக்கத்தில் ஏதேதோ பாடல்கள் பாடியபடி இருந்த என்னை அழைத்தார் உயர் அலுவலர் ஒருவர். என்னைப் பற்றி விசாரித்தார், நகைத்தார், என்ன நினைத்தாரோ போகச் சொல்லிவிட்டார். நானும் என்ன நினைத்தேனோ எழுந்து நின்று “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்ற பாடலை உரக்கப் பாடத் தொடங்கினேன். அங்கிருந்த பிற காவலர்கள் என்னை அடிக்கப் பாய்ந்தார்கள். உயர் அலுவலர் அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பிவிட்டு என்னைப் பாடச் சொன்னார். பித்துத் தலைக்கேறிய நிலையில் பாடினேன். பல்லவி முடிந்து சரணம் பாடும்போது உயர் அலுவலர் தன்னையும் மீறி உடைந்து அழத் தொடங்கினார். நானும் விம்மலின் நடுவில் பாடினேன். “ஆதி வீடு அந்தம் காடு. இதில் நானென்ன? அடியே நீயென்ன? ஞானப்பெண்ணே” என்ற வரியைப் பாடியதும் தரையில் விழுந்து கத்தி அழுதார் அவர். அந்த அழுகையின் உச்சியில் அவர் காவலர் இல்லை. நான் கவிஞன் இல்லை. அங்கிருந்த யாருக்கும் அகந்தை இல்லை. அத்தனை பேரும் கண்ணதாசனின் குழந்தைகளாக இருந்தோம். உயர் அலுவலர் கொஞ்ச நேரத்தில் நிலைமை உணர்ந்து எழுந்து அமர்ந்து என்னைப் பார்த்தார். குரல் எழுப்பாமல் என்னைப் போகச் சொன்னார். நானும் கிளம்பினேன்.

கண்ணதாசன் தமிழ் இலக்கிய மரபில் திளைத்தவர். பக்தி மார்க்கத்தில் தனக்கான அமைதியைக் கண்டுகொண்டவர். சித்தர் பாடல்களின் வழி தனது திரைமொழியைக் கண்டடைந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக இசைவழி எளிய மனிதர்களின் எளிய வாழ்வைப் பாடிக்கொண்டே இருந்த கவிக்குயில்.

அவர் ஒரு பட்டறிவுக் கவிஞன். பட்ட பாட்டை எல்லாம் பாட்டாக்கிய பாவலன். தனது தவறுகளில் இருந்து ஞானம் கற்ற சித்தன். இடைவிடாது அவரை நோக்கிப் படையெடுத்த கவலைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத மனிதன். பாமர ஜாதியில் தனிமனிதன். படைப்பதனால் அவன் ஓர் இறைவன்.

*********

Comments

Popular Posts