தாள அமைதி
சிறுகச் சிறுகக்
கற்கண்டை உண்ணும்
சில்லெறும்பாகத்
தன்னுணர்வைத் தின்னுகிறது
ஏதோ ஒன்று.
தின்னத் தின்னக் குறையும்
தன்னுணர்வு
அவ்விடத்தில் நிறையும்
ஏதோ ஒன்று.
இப்போது இருப்பது
உருண்டு திரண்ட
ஒப்பற்ற ஒன்று.
எல்லாவற்றையும் தின்றுவிட்ட
ஏதுமற்ற ஒன்று.
எல்லாவற்றையும் தின்ற பிறகே
எதிர்ப்படும் ஒன்று.
தன்னைத் தான் சுரந்து
தன்னில் தான் திளைக்கும்
தன்னற்ற ஏதோ ஒன்று.
*
2. அந்தி:
ஒளி பசந்த அந்தியில்
சன்னலோரம்
சாய்வு நாற்காலியில் அமர்ந்து
சூலுற்ற தன் வயிற்றை
மெல்ல வருடிக்கொடுக்கிறாள்
தாய்.
அறையின் இருளில்
ஒளிக்கயிறுகளாக அசையும்
அந்தியின் வெளிச்சம் உணர்ந்து
வயிற்றில் மெல்ல அசையும்
சூல்.
சூல் அசையுந்தோறும்
உள் உருகும் தாய்மை.
எங்கிருந்தோ வந்து
சன்னற்கம்பியில் அமர்ந்த
மஞ்சள் பறவையின் அலகிசை
தாய்க்கும் சேர்த்துப் பாடும்
தாலேலோ.
*
3. தாள அமைதி:
ஓடி ஓடித்
தாளம் உருவாக்கிய குதிரை
தாளத்திற்கேற்ப
ஓடப் பழகிவிட்டது.
தாளத்திற்கேற்ற ஓட்டமா?
ஓட்டத்திற்கிசைய தாளமா?
குதிரை மறந்தது.
தாளத்தின் அமைதியில் குதிரையும்
குதிரையின் அமைதியில் தாளமும்
ஓடியவாறே இருக்க
உற்றறியும் அகத்திற்குக் கேட்பது
ஓடியவாறே இருக்கும்
ஒப்பற்ற வெறும் தாளம்.
*
4. மால்வால்:
ஈ வந்து மொய்க்க
வாலைச் சுழற்றியது மனம்.
ஈக்களாக வரத்தொடங்க
சுழற்றல் இயல்பானது.
சுழற்றிக்கொண்டிருப்பதில்
சுகம் உண்டு போலும்.
சுகத்தில் வேகமெடுத்தது
மனச்சுழற்று.
ஈ வருவது நின்றாலும்
சுழன்றவாறே வால்.
*
5. எப்படி?:
எப்படி அழாமல் இருப்பேன்
காட்டுக்குயிலின் துயர் கேட்டு?
எப்படி விசும்பாமல் இருப்பேன்
தனியே நின்றெரியும் சுடரைக் கண்டு?
எப்படிக் கதறாமல் இருப்பேன்
தார்ச்சாலையில் குழையும்
ஒற்றை மல்லியைப் பார்த்து?
எப்படிக் கடந்து போவேன்
தாயின் மடி முத்தும் கன்றினைக்
கண்ட பிறகு?
எப்படிக் குங்குமம் வைப்பேன்
இரத்தக்கறையாக மிஞ்சிய உடலைப் பார்த்த பிறகு?
எப்படி மனிதரை வெறுப்பேன்
குழந்தையின் சிரிப்பைப் பார்த்த பிறகு?
எப்படி இறந்து போவேன்
கவிஞனாக ஆன பிறகு?
*
6. பூனைக்கண்:
படித்துக்கொண்டிருந்த என்னைப்
பார்த்துக்கொண்டிருந்த பூனையைப்
பார்க்காதது போலப் பார்த்தேன்.
கூரிய அதன் பார்வையில் இருந்தது
என்மீதான கருணை
என் நிலை குறித்த வருத்தம்
என் தனிமையைத் துடைத்தெறியும்
சிறுஒளி
எழுதுவதற்கு ஏற்ற ஒரு கவிதை
வல்லிய அதன் பார்வையில் இருந்தது
மன்னித்தருளும் மாண்பும்
மரணம் அருளும் நோன்மையும்.
*
7. மெய்மையின் சுவை:
ஆயிரம் விளக்குகள்
நின்றொளிரும் மண்டபத்தில்
அமர்ந்திருந்த எனக்குப்
பேரிருளைக்
கணம் கணமாகச் சென்றடையும்
உன்மத்தம் கூடியது
முதல் விளக்கை ஊதி அணைத்தேன்
அடுத்த விளக்கை அணைத்தேன்
ஒவ்வொரு விளக்காக
அணைத்தவாறே சென்றேன்
கடைசி விளக்கின் முன் அமர்ந்து
சூழப் பந்தலிட்ட இருளைக்
கண்ணுற்றேன்.
அகப்பெருங்களிப்பில்
கடைசி விளக்கையும்
ஊதி அணைத்தேன்.
வெறும் இருளுக்கும்
சுடர் இருந்த இருளுக்கும்
வேறு வேறு சுவை.
*
8. ஈகைப்பெருநிலை:
ஊழ் என்பது
காலமற்ற
இடமற்ற
உட்சேய்மையில் திரண்டிருப்பது.
ஊழினை அறிய
உள் ஒரு வழியாம்.
ஊழினை அடைய
உள் ஒரு தடையாம்.
உள் எனும் மயக்கம்
தெளியத் தெளிய
இடத்தொலைவு குறையும்
காலச்சேய்மை கரையும்.
ஊழினை அடைந்த பிறகு
உலகெலாம் தழுவி நிற்பது
ஒரே “நான்”
இரக்கத்தால் காயடிக்கப்பட்ட
ஈகைப்பெரும் “நான்”.
*
9. தூயநல் நாட்டம்:
செம்பருத்தி மலரின்
குழல் அன்ன உடலின்
அடியில் ததும்பி நிற்கும்
இருளினைக் காமுற்றது
இன்களிவண்டு.
எடுக்க எடுக்கத் தீராத
இருள் உள்ள வரை
துடிப்பதை நிறுத்தாது
தூயநல் நாட்டம்.
*
10. கமம்:
உடலுக்கு முன்னிருந்தே
உலகில் இருப்பது காமம்.
கமம் கால் முளைத்துக்
காமமானது மனிதர்க்கு.
கமம் உலகியற்கை.
பூதங்களின் பேரியல்பு.
பூதக்கலப்பில் பொங்கி நுரைப்பது
புலன்களின் கமம்.
புலன்களின் ஒரே தேவை கமம்.
புலன்களின் அசைவற்று
கமம் ஆடும் நடனத்தைக்
கண்டு களிப்பதே தவம்.
கமம் ஆடும் நடனத்தைக்
கண்டு களிப்பது எதுவென்று
கண்டடைவதே ஞானம்.
இன்பத்தைக் காண்பது தவம்
இன்பத்தில் சென்றிருப்பது ஞானம்.
- கார்த்திக் நேத்தா
(ஜீலை மாதம் தமிழினி மின்னிதழில் வெளியான கவிதைகள்)
Comments
Post a Comment