ஏன் வாசிக்க வேண்டும்?
ஏன் வாசிக்க வேண்டும்?
ஏனென்றால் நமக்கு "நான்"என்ற எண்ணம் உருவாக்கிய உலகினைக் கடந்து வேறேதும் தெரியாது.
ஏனென்றால் நமக்கு அன்றாடங்களின் ஆழங்களில் இயங்கும் நுண்மெய்மைகளைக் குறித்து ஏதொன்றும் தெரியாது.
ஏனென்றால் மனவேகத்தைப் பின்தொடர்ந்தே நாம் ஓடிக்கொண்டிருப்பதால் கணத்தில் மலர்ந்து நிற்கும் ஞானம் பற்றிய அறிதல் கிடையாது.
ஏனென்றால் ஐம்புலன்களின் அறிவுதரும் comfort living ஐ மீறி
தொல்காப்பியர் உணர்ந்தளித்த
"ஆறறிவான மனன்" குறித்து கிஞ்சித்தும் தெரியாது.
ஏனென்றால் கட்டுக்கு உட்பட்ட நமது அனுபங்களைக் கடந்து பேரண்டத்தின் இயக்கமும் பிற பேருயிர்களின் அசைவுகளும் நமக்கு வெறும் தகவலாக, அறிவாகத் தெரியுமே ஒழிய மெய்யான உணர்வாகத் தெரியாது.
ஆக, மேலோட்டமான மனத்திற்குத் தெரிந்த கொஞ்சூண்டைத் தவிர நமக்குப் பெரிதினும் பெரிதானவை தெரியாது என்பதால் நமக்கு வாசிப்பு தேவை.
தெரிந்துகொள்ளவேண்டும் எனும் விருப்பம் இருந்தால் ஒழிய வாசிப்புப் பக்கம் மனிதன் வரமாட்டான்.
ஆக, வாசிப்பதற்கு அடிப்படையானது விருப்பமும் வேட்கையும் ஆகும் என்று கருதுகிறேன்.
இனக்குழு காலகட்டத்தில் மக்களை வழிநடத்திச் செல்ல இனத்தலைவன் அல்லது இனத்தலைவி இருந்தார்கள்.
அப்போது தனிக்குழுவாக அறிவர்கள் இருந்தார்கள். சான்றோர்கள் இருந்தார்கள். புலவர்கள் இருந்தார்கள். சமண, பௌத்த, ஆசீவக நெறிவழி ஊர் ஊராகச் சென்று தாம் கண்டடைந்த பேருண்மைகளைப் பரப்பி வந்தார்கள்.
ஐந்திரம் கற்ற பெரும்மனிதர்கள் மொத்த மக்கள் குமுகத்திற்கும் ஒளிகாட்டியாக இருந்தார்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களும் தங்களது கூரிய அவதானிப்புகளாலும் கூட்டு வாழ்க்கையின் உதவியாலும் பட்டறிந்து நிறைய கற்றிருந்தார்கள்.
அப்போது துறவியர் நாடிச்சென்ற தனிமை இருந்தது. தனிமனிதனுக்குள் சமூகம் வலிய திணித்த தனிமை என்ற ஒன்று இல்லை. இந்த நிலை மாறிய
நிலவுடைமை காலகட்டத்தில் அடிமை நிலையில் அல்லது பணியாள் நிலையில் ஆண்டான் சொல்வதே அறமென்று வாழ்ந்து வந்தோம். மீறும் வழிகள் இருந்தும் மீறிப்போகமுடியாத கட்டமைப்பிற்குள் சிக்குண்டு இருந்தோம்.
பேரரசு காலகட்டத்தில் அரசனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டோம்.
நாம் மேற்கொண்டு வாழ்ந்த காலகட்டங்களில் நிகழ்ந்த தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்ட
நிறைய அற ஓலைகள் அற நூல்கள் இயற்றப்பட்டன. சமூக அசைவுகள் குறித்தும் தனிமனித மன இயல்புகள் குறித்தும் ஆழாமாகச் சிந்தித்து சிலர் தொடர்ந்து இயங்கிவந்தார்கள்.
தவத்தின் வழியாகவும் அவதானிப்புகளின் வழியாகவும் உற்றுணர்ந்தவற்றை பதிந்து வைத்து பரப்பி வந்தார்கள்.
அச்சு ஊடகம் வந்து நிறைய நிறைய எழுதினோம்.
பல்வேறுபட்ட பார்வைகள் கிடைத்தன.
இப்படியான போக்கில் இன்று நாம் வந்து சேர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் நாம் இழந்திருப்பது எதை என்றால் கற்றலை.
தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் உலகமயமாக்கலாலும் கற்றலுக்கான நமது தேடல் குறைந்திருக்கிறது.
எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் எனும் எண்ணம் வளர்ந்திருக்கிறது.
வாசித்தலின் வழிக் கற்றல் என்பது வாழ்நாள் முழுக்க நடக்கவேண்டிய ஒரு மனப்பழக்கம் என்பதை நாம் வசதியாக மறந்துவிட்டோம்.
நவீன மனிதர்களாகிய நாம் சில விதிவிலக்குகள் தவிர அறிவர்கள் என்று யாரையும் ஏற்றுக்கொள்வதில்லை.
சான்றோர்கள் என்று யாரையும் ஏற்றுக்கொள்வதில்லை.
இன்றைய மனிதர்களாகிய நமக்கு
கற்றுக்கொள்வதற்காக இருந்த ஆயிரம் ஆயிரம் வாசல்கள் அடைக்கப்பட்டு விட்டன. அல்லது அடைத்துவிட்டோம். இந்த நிலையில் நமக்கு இருக்கும் கற்றலுக்கான ஒரே வெளி புத்தக வாசிப்பு ஒன்றே.
வாசிப்பு நிகழும்போதே thesis, anti thesis and synthesis நிகழமுடியும்.
வரலாற்றுப் போக்குகளையும் தத்துவ மரபுகளின் கருத்துகளையும் தொன்மம் குறித்தான அறிமுகங்களையும்
மாறிவரும் சமூக அமைப்பிற்குள் மாறாது நிலைத்திருக்கும் தடைகளையும் அவற்றை உடைத்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கான வெளிச்சங்களையும் நமக்குத் தருவது வாசிப்பு ஒன்றே.
நமது தமிழ்ச்சமூகத்தின் பெருங்கொடையான மெய்யியலை புத்தகங்களின் வழியே அறிகிறோம்.
வாசிப்பின் அடுத்த கட்டமாகவே மெய்யியலைப் பயிலும் நிலைக்கு நாம் முன்நகர்கிறோம்.
"இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க
இதன் இயல்புணர்ந்தோரே" என்ற ஆற்றுப்படுத்தும் மனப்பாங்கு பக்குடுக்கை நன்கணியாருக்கு வாசிப்பு அல்லது கற்றல் எனும் செயல்பாட்டினால் மட்டுமே விளைந்திருக்க முடியும்.
இனிய காணும் முறைகளில் அழிந்தது போக நம் முன் இன்று இருப்பது வாசிப்பு மட்டுமே.
எனவே வாசிப்போம். உயிரிரக்கம் நிறைந்த மனிதத்திரளாக முன்னேறுவோம்.
*
எதற்கு வாசிக்க வேண்டும்?
என் வாழ்வின் எல்லா காலங்களிலும் நான் பலவற்றை வாசித்திருக்கிறேன். வாசித்துவருகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. பல்வேறு நூல்களை வாசித்தாலும், `நான் யார்', `நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?' என்ற அகம் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் தரக்கூடிய நூல்கள்தான் எனக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. பொதுவாக வாசிப்பைப் பற்றிச் சொல்லச் சொன்னால் இவ்வாறு சொல்லலாம்.
வாசிப்பு, அகந்தையைக் கொடுக்கும். பிறகு, அகந்தையைக் குறைக்கும். வாசிப்பு, குழப்பத்தின் தொடர்ச்சியாகத் தெளிவைக் கொடுக்கும். வாசிப்பு, குண இயல்புகளைக் கண்டடையும்; குணக்கோளாறுகளைச் சுட்டிக்காட்டும்; பாவனைகள், பகட்டுகள் எல்லாம் அலை ஓய்ந்த பிறகு, உணர்வுகளும் உணர்ச்சிகளுமே பிரதானம் என்பதை உணர்த்திவிடும்.
வாசிப்பின் வழியாக அறிவின் மமதை எழுந்தால் அது அகந்தையின் அனுபவமே தவிர, வாசிப்பின் அனுபவமாகாது. வாசிப்பின் வழியாக உயிர்களின்பால் அன்பு சுரந்தால், நாம் தேர்ந்த வாசிப்பாளன்.
வாசிப்பு எனது எல்லா கோளாறுகளையும் சுட்டிக்காட்டியது. என் குண இயல்புகளை உற்று நோக்கப் பெரிதும் உதவிவருகிறது.
ஆரம்பத்தில் நாம் வாசிக்கும்போது, நமக்கு நிறைய தெரிந்திருக்கிறது என்ற அகந்தை தோன்றும். அது அல்ல வாசிப்பதன் நோக்கம். தொடர்ச்சியாக நாம் வாசிக்கிறபோது அந்த அகந்தை காணாமல்போய், நமக்கு ஓர் அமைதி கிடைக்கும். நாம் படித்து கண்டடைந்த விஷயங்களால் ஒரு ஞானம் கிடைக்கும். அது நமக்கு வாழ்வில் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவேதான் வாசிப்பு அவசியம் என்கிறேன்.
*
உலகப் புத்தக நாளினை முன்னிட்டு தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் நூலக நிகழ்வுகளில் சாலிகிராம நூலகத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
நன்றி: தமிழக பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், வாசக சாலை.
அருமையான பதிவுக்கு நன்றி!
ReplyDelete