நமக்கு நாமே

நண்பரே, 
உண்மையில் நாம் வீழ்ச்சியுற்றது
அவனது ஆளுயரக் கத்திகளால் இல்லை 
நமது சொந்த அறியாமையால் தான்.
அவன் கண்முன்னால் ஆட்டிய 
ஆயிரம் ரூபாய்த் தாள்களால் இல்லை. 
நமது பேராசையால்தான்.
அவனிடம் எல்லாம் இருக்கிறது 
என்ற பொய்யால் இல்லை. 
நம்மிடம் இருப்பதைப் புரிந்துகொள்ள விடாத  
நமது பொறாமையால்தான்.
புறக்காரணங்களால் இல்லை. 
நமது உள்முரணால் நமக்கு நாமே 
உலை வைத்துக்கொண்டோம். 
எளிய எனது நண்பரே, 
எப்போதும் நாம் வீழ்ச்சியுறுவது 
நமது பளபளப்பான விசுவாசத்தினால்தான்.
அவன் மிகை எதார்த்த உயிரினமாகப் 
பருத்துக் கொழுத்திருப்பது 
நமது சொந்த அகந்தையால்தான். 
நமது குருட்டு நம்பிக்கையே 
அவனது பிரகாச ராஜபாட்டை.
பழகிய அன்பைப் பிடித்துவைத்துப் 
பேன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அன்பை நிகழ்காலத்தில்
மலர்விக்க வேண்டும்.  
வாழ்விதத்தில் அன்பும் பரிவும் 
பரிணாமம் பெறவேண்டும்‌, அன்பரே. 
தொலைந்து போனது உள்ளே. 
நாம் தேடிக்கொண்டிருப்பது 
எப்போதும் வெளியில் தான்.
*

Comments

Popular Posts